“மனிதர்களின் உண்மையான மூதாதையர் யார்?” – நோர்ஸ் புராணக் கடவுள்களின் பெயருடன் தொடர்பான அதிர்ச்சி கண்டுபிடிப்பு!

 


பூமியில் சிக்கலான உயிரினங்கள் (complex life) எப்படி உருவானது என்பது விஞ்ஞானிகளுக்கு நீண்ட காலமாக ஒரு பெரிய மர்மமாக இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான புதிய ஆய்வு ஒன்று, மனிதர்கள் உட்பட அனைத்து தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூஞ்சைகள் உருவான அடிப்படை மூதாதையரைப் பற்றி புதிய விளக்கத்தை வழங்கியுள்ளது. இந்த ஆய்வின் மையத்தில் “Asgard archaea” எனப்படும் மிகப் பழமையான நுண்ணுயிர்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து சிக்கலான உயிரினங்களும் Eukaryotes எனப்படும் வகையைச் சேர்ந்தவை. இந்த உயிரினங்களின் செல்களில் DNA கொண்ட nucleus மற்றும் சக்தியை உருவாக்கும் mitochondria போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன. ஆனால் இந்த வகை உயிரினங்கள் எப்படி உருவானது என்பது விஞ்ஞான உலகில் இன்னும் முழுமையாக விளக்கப்படாத கேள்வியாகவே இருந்தது.

பூமியின் வரலாற்றில் சுமார் 2.4 முதல் 2.1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புGreat Oxidation Event” எனப்படும் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அந்த காலத்தில் பூமியின் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அளவு திடீரென அதிகரித்தது. இதன் பின்னர் சில லட்சம் ஆண்டுகளில், முதன்முதலாக eukaryotes உயிரினங்களின் அடையாளங்கள் fossil வடிவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், ஆக்சிஜன் தான் சிக்கலான உயிர்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என பல விஞ்ஞானிகள் கருதினர்.

ஆனால் ஒரு விசித்திரமான சிக்கல் இருந்தது. eukaryotes உருவாக காரணமானதாக கருதப்படும் Asgard archaea எனப்படும் நுண்ணுயிர்கள் பெரும்பாலும் ஆக்சிஜன் இல்லாத கடலடிப் பகுதிகளில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இதனால், ஆக்சிஜன் தேவையான மற்ற நுண்ணுயிர்களுடன் இவை எப்படி சேர்ந்து புதிய உயிரினங்களை உருவாக்கின என்பது விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக இருந்தது.

இப்போது Nature இதழில் வெளியான புதிய ஆய்வு இந்த புதிருக்கு ஒரு முக்கிய விளக்கத்தை வழங்கியுள்ளது. விஞ்ஞானிகள் கடலடிப் பகுதிகள் மற்றும் கடற்கரை மணற்பரப்புகளில் இருந்து DNA மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தபோது, Asgard நுண்ணுயிர்களின் பல புதிய வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் சில வகைகள் ஆக்சிஜனை பயன்படுத்தும் திறன் கொண்டதாக இருந்தது என்பதும் தெரியவந்தது.

இந்த Asgard archaea குழுவுக்கு நோர்ஸ் புராணங்களில் வரும் Odin, Thor போன்ற கடவுள்களின் உலகமான “Asgard” என்ற பெயரிலிருந்து பெயரிடப்பட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டு வடஅட்லாண்டிக் கடலில் உள்ள “Loki’s Castle” என்ற கடலடிப் எரிமலையின் அருகே முதன்முதலாக Lokiarchaeota எனப்படும் வகை கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் Heimdallarchaeia போன்ற பல வகைகளும் கண்டறியப்பட்டன. இவை சிக்கலான உயிரினங்களுடன் ஒத்த genes கொண்டிருப்பதால், மனிதர்களின் பழமையான மூதாதையருடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.

ஆய்வாளர்கள் கூறுவதாவது, இந்த Asgard நுண்ணுயிர்கள் ஏற்கனவே ஆக்சிஜனை பயன்படுத்தும் திறனை வளர்த்திருந்ததால், பிற bacteria களுடன் இணைந்து புதிய வகை உயிரினங்களாக மாறியது. அந்த மாற்றமே இன்று நாம் காணும் அனைத்து eukaryotic உயிரினங்களின் தோற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம். எதிர்காலத்தில் ஆய்வகங்களில் Asgard நுண்ணுயிர்களை வளர்த்து, அவை eukaryotic செல்களாக மாறும் செயல்முறையை நேரடியாகக் காண முடியும் என்ற நம்பிக்கையும் விஞ்ஞானிகளுக்கு உள்ளது.

பூமியில் வாழும் பெரும்பாலான உயிரினங்கள் eukaryotes ஆக இருப்பதால், அவற்றின் தோற்றத்தை புரிந்து கொள்வது மனிதர்களின் சொந்த மூலத்தை புரிந்து கொள்வதற்கான முக்கிய விசையாக இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால், பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த மாற்றத்தை புரிந்து கொள்வது, மனித வாழ்வின் ஆரம்பத்தை விளக்கும் மிக முக்கியமான விஞ்ஞான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments